Tuesday, November 19, 2013

தண்ணீர் தேடும் தங்கமீன்களின் கண்ணீர்

         ஒரு திரைப்படத்தின் சினிமாயியல் குறித்து விமர்சிக்க அது குறித்து ஆழ்ந்த அறிவும் அனுபவும் அவசியம் என நினைப்பவன் நான். காட்சி ஊடகம் ஒரு வலிமையான புரட்சிக் கருவி என கருதும் ஒரு ரசிகனாகிய நான் அது கட்டுடைக்க வேண்டிய தனி மனித, சமூக கருத்துக்கள் குறித்து பேசுவதே நியாயம் என நினைத்து, போலி நகைச்சுவை திரைப்படங்களுக்கு இடையே அண்மையில் வெளிவந்த இயக்குனர் ராமின்  "தங்க மீன்கள்" குறித்து என் வரிகளை பதிவு செய்கின்றேன்.
      ஒரு ஆசிரியரை கோமாளி ஆக்கிவிட்டால் அதை ஒரு சிறுவர் திரைப்படம் என்று ஆக்கி பாடசாலை, கல்வி முறை என எல்லாவற்றிலுமுள்ள வெறுப்பை, தமது ஆதங்கங்களை ஆசிரியர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.  உண்மையில் “தங்கமீன்கள்” ஆசிரியர்களை குறைகாண்கின்ற திரைப்படமா?. தங்கமீன்கள் பேசுகின்ற அரசியல் தான் என்ன?. ஏன் தனியார் பாடசாலைகள்  அரச பாடசாலைகளை விட பிரபலமானதாகவும் சிறந்ததாகவும் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்?. ஏழைகளின் பிள்ளைகள் பாடசாலை செல்ல ஆரம்பித்த போது பணக்காரர்களுக்கு தமது தனித்துவம்,  தமது அதிகாரம் எல்லாவற்றையும் தமது பிள்ளைகளுக்கு கடத்துவதற்கு ஒரு வழிமுறை தேவைப்பட்டது. அதற்கு சிறந்த வழிமுறையாக தனியார் பாடசாலைகளை கண்டார்கள். அரச பாடசாலைகளை தரம் குறைந்த மோசமான பாடசாலைகளாக ஒரு பிம்பத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். நடுத்தரவர்க்கத்திற்கு எப்போதும் தம்மை பணக்காரர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு நோய் இருக்கின்றது. அதற்கு சிறந்த வழிமுறையாக தனியார் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை படிக்க வைத்து, சூதாட்டம் என்பதைப்புரிந்து கொள்ளாமல் அதை தமது அந்தஸ்தின் தரமாக மாற்றிக் கொண்டார்கள் .  ‘கல்யாணி’ என்கின்ற அப்பாவும் இந்த சமூக கருத்து நிலைக்கு பலியாகிய எத்தனையோ அப்பாக்களின் பிம்பம் தான். அரசு பாடசாலைகளையும் அதன் ஆசிரியர்களையும் சந்திகளில் விமர்சித்த அளவுக்கு தாம் காசு கொடுத்து படிக்க வைக்கின்ற தனியார் பாடசலைகள் குறித்தோ அதில் இருக்கின்ற உயர்தரம் கூட  தேராத ஆசிரியர்கள் குறித்தோ பேசுவது கூட இல்லை. ஏனெனில் திரைப்படத்தில் போலவே கேள்வி கேட்டால் பிள்ளையை வேறு பாடசாலைக்கு மாற்றி விட சொல்லிவிடுவார்கள். இதனால் தான் சந்துக்கு சந்து சில்லறை கடைகளை விட சர்வதேச பாடசாலைகள் அதிகரித்து விட்டன. இந்த சமூக மன நோய் கல்யாணியை ஊரிலிருந்து, தன் குடும்பத்திலிருந்து பிரித்து, ஊண் உறக்கமின்றி இரவு பகலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றது.  எங்கள் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காக கடல் கடந்து தூர தேசம் சென்று படும் துயரங்கள் இதை விட கொடுமையானது. 
 இந்த திரைப்படத்தின் கதாநாயகி "செல்லம்மா " வைப் போன்று எங்கள் குழந்தைகள் ஆங்கில மொழியில் கல்வி கற்க நிர்ப்பந்திக்கப்பட்டு தம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆங்கில எழுத்து கூட தெரியாத நிலையில் தம் செல்லம்மாக்களை சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சந்தோசப்படுகிறார்கள். அவர்களை பொருத்தவகையில் அவர்களால் முடியாததை பிள்ளைகள் அடைந்து கொண்டார்கள் என்று நினைக்கிறார்கள்.ஆனால் குழந்தைகள் தமது பாடங்களை விளங்குவதை விட அதை கற்பிக்கும் மொழியை புரிந்து கொள்வதில் திணருகிறார்கள். தமது பாடங்களை தம் அன்றாட வாழ்வியல் அனுபவங்களுடன் சம்பந்தப் படித்திக்கொள்ள முடியாமல் கல்வி கற்றல் என்பதை ஒரு சுமையாக கண்டு வெறுக்கிறார்கள். இதை பெற்றோர் உணர மறுக்கின்ற துரதிஷ்டம் குழந்தைகளின் வாழ்க்கையை வீணாக்கி , அவர்களை W ஆக்கிவிடுகின்றது.
இங்கே நாம் ஆசிரியர்களை மாத்திரம் குற்றவாளி கூண்டில் கழுவேற்றி எங்களின் மீசைகளை பாதுகாத்துக்கோள்கிறோம். எங்களுக்கு தெரிந்து எத்தனை ஆசிரியர்கள் இப்படி இருந்திருப்பார்கள்?. ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே இருப்பார்கள். ஓரு ஆசிரியரின் வேதனைகளை யாரும் கேட்டுப்பார்த்தது கிடையாது. ஒரு வகுப்புக்கு தயாராவதன் பின்னாலிருக்கின்ற வலியினை ஒரு ஆசிரியர் மட்டுமே  அறிவார். இதை யாரும் வெளிக்கொணர ஏதும் செய்வார்கள் என்றும் தோன்றவில்லை.

      மொத்தத்தில் இந்த திரைப்படம் எங்கள் நியாயங்களையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகின்றது. ஏன் நமது காசை அரச பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தக்கூடாது?. அரசாங்க பாடசாலைகளில் கழிவரை கூட இல்லாத நிலையில் தனியார் பாடசாலைகளை குளிரூட்டுவதில் எங்கள் பணங்களை புதைக்கிறோம். இந்த அதிகாரவர்க்கத்தின் சுரண்டலை கேள்விக்குட்படுத்துவதனாலோ அல்லது ஒரு பெரும்பான்மை மக்கள் தொகையின் அந்தஸ்து நிலையை கேள்விக்குட்படுத்தவதனாலோ என்னவோ திரைப்படம் வெளிவர மூன்று வருடங்களாக இயக்குனர் ராம் காத்திருக்க வேண்டியிருந்திருந்ததோ எனத் தோன்றுகின்றது. 
வழமை போன்று ஊடகங்களும் இதை ஒரு வழமையான நமது கல்வி முறையியல் குறித்தான விமர்சன திரைப்படம் என அறைத்த மாவையே அறைக்கும் காத்திரமான பங்களிப்பை செய்து முடித்துள்ளன. ராமின் "கற்றது தமிழ்"திரைப்படமும் கலைத்துறை பட்டதாரிகளை எப்படி சமூகம் மிகக் கீழ் நிலையில் கொண்டு சேர்த்துள்ளது என்பதையும் பணம் பார்க்கும் துறைகளை மட்டுமே மதிப்புக்குறையதாக அதிகார வர்க்கம் மாற்றியமைத்து நமது சமூகத்தின் கனவாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும்  பேசியது.                        

எனவே ஒரு சினிமா நமது கால நம்பிக்கைகளையும் கனவுகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. பண முதலைகளின் சுரண்டல் அரசியலின் எங்கள் வியர்வையின் வலிகள் பகடைக்காய்களாக்கி விடப்பட்டுள்ளன.  எப்போது டீக் கடைகளில் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை விவாதிக்கப் போகின்றோம்?. விடைகள் தேட விழுமியங்கள் இடம் கொடுக்குமா?.

Sunday, February 17, 2013

நாதிர் சிமினின் பிரிவு




"A Separation",  அஸ்கர் பர்ஹாதியின் இயக்கத்தில் வெளிவந்த  ஈரானிய திரைப்படம்.  2012 சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஓஸ்கார் மற்றும் பல சர்வதேச விருதுகளையும் கொண்டு பெரு அங்கீகாரம் பெற்றமை தெரிந்த விடயம். வழமையான ஈரானிய திரைப்படங்களுக்குரிய சிறப்புக்களை கொண்டுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இங்கு அதன் கதை பற்றியோ ஏனைய தொழில்நுட்பங் குறித்தோ எழுதப் போவதில்லை. அது குறித்து போதிய அறிவோ அநுபவமோ இல்லை. ஓரு திரைப்படம் எடுப்பதன் வலியும் வேதனையும் எடுத்தவனுக்கு தான் தெரியும். ஆனால் ஒரு சாதாரண ரசிகனாக நான் கண்ட சில வித்தியாசங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

வழமையாக சிறுவர்களை மையப்படுத்தி நகர்ந்த ஈரானிய கதைகளுக்கு நடுவில் பெரியவர்களின் வாழ்க்கை இங்கு பேசப்படுவது முக்கியமானது. பல அரசியல் சமூக விவாதங்கள் கொண்ட திரைப்படங்கள் ஈரானிய அரசின் தணிக்கைகள் காரணாமாக அவ்வளவாக சாதரண மக்களுக்கு பார்க்க கிடைப்பதில்லை. ஆனாலும் இங்கும் அதே யதார்த்தமான மனிதர்களை சந்திக்க கிடைக்கின்றது. அதிலும் வித்தியாசமாக பெண்கள். ஈரான் என்றாலே பெண் அடிமைத்தனம் , கறுப்பு ஆடையில் முகம் மூடிய, அந்நியவர்களுடன் பேச அனுமதிக்கப்படாத பெண்கள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள மாயை இங்கு உடைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தான் கதையை நகர்த்துகிறார்கள்.



 'சிமின்' என்கின்ற பெண்,  தனது கணவன் தனது மகளுடன் அமெரிக்கா வர மறுப்பதை காரணம் காட்டி தனக்கு விவாகரத்து வேண்டி வழக்கு தாக்கல் செய்கிறாள். என்னை பொறுத்த வரையில் இந்தப் பெண்ணினால் தான் இந்த கட்டுரையே. பெண் உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் இவள் எப்படி சாத்தியம்? . அவளின் காரணம் மிக சாதரணமானதாக இருந்தும் அவளால் அதற்கு போராட முடிகிறது . கதை முழுதும் அவள் கணவனுடன் எவ்வளவு அன்பானவள் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த பிரிவு வித்தியாசமானது. அவளுக்கும் கணவனுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், பிரிய மாட்டோம் என்று, ஆனால் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கும். இதை விட கணவன் மனைவி உறவின் அழகை சொல்லியிருக்க முடியாது. சிமின் கறுப்பு நிகாப் அணிவதே இல்லை. அவளது ஆடை மேற்கின் சிந்தனைகளை பிரதிபலிக்கும் பெண்  என்பதையே காட்டுகிறது. தனியாகவே காரை ஒட்டுகிறாள். தனியாக சென்று பொலீஸில் கணவனுக்காக வாதாடுகிறாள். கடைசியில் அவளே பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறாள்.  இந்த கதாபாத்திரம் ஈரானின் உண்மையான பெண்களை பிரதிபலிக்கும் என்றால் நமக்கு ருஷ்டி சொன்ன ஈரான் காலவதியாகிவிட்டதாக சொல்லலாம். ஏன் இது குறித்து யாரும் பேசவில்லை என்பது ஆச்சரியமானதே. எப்போதும் ஊடகங்கள் ஈரானை மேற்கு கட்டமைத்த வரையரைக்குள்ளேயே பார்க்கின்றன.

கடைசிக் காட்சியில் ராஸியா தனது கணவனிடம் தானே பொய் சொன்னதாக சொல்கின்ற போது அவள் கணவன் காட்டும் தடுமாற்றம் அவனுடைய கோபமா,  இயலாமையா என்று எங்களுக்கே ஒரு தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்த காட்சியில் வேறு எந்த சினிமாவிலும் அந்த பெண் தன் கணவனிடம் அடி வாங்கியிருப்பாள். பெண்களை அடிமையாக்கிய ஒரு சமூகத்தின் வலிமை மிக்க ஆண் தன்னையே அடித்துக் கொள்கிறான். ஈரானின் ஆண்கள் எப்போது பெண்களோடு இப்படி நளினமாக பழகத் தொடங்கினார்கள்?.  இங்கு மனது ராஸியாவை மன்னித்து விடுகிறது.  ராஸியா யார்?..

சிமின் தனது கணவன் நாதிருடன் முரண்பட்டு தன் தாய் வீட்டிற்கு போய்விடுகிறாள். அவளுடன் கணவன் வர மறுக்க காரணமான நாதிரின் வயதான நோய்வாய்ப்பட்ட தந்தையை கவனிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பெண் தான் ராஸியா.  ராஸியா தன் கவனயீனத்தால் வெளியில் சென்ற வயதான தந்தையை தேடிச் செல்லும் வழியில் ஏற்படும் விபத்தில் தன் வயிற்றில் இருந்த கருவை இழக்கிறாள். ராஸியாவின் கவனயீனத்தினால் நாதிரின் தந்தை விபத்துக்குள்ளாக, நாதிர் ராஸியாவை வெளியில் தள்ளுகிறான். இதை காரணமாக்கி கரு கலைந்ததற்கு நாதிரே காரணமென குற்றம் சாட்டுகிறாள். இதுவே கதையின் திருப்பம்.   மனிதர்களின் சூழ்நிலைகளே அவர்களை பலவீனர்களாக்குகிறது என்ற வாழ்வின் உண்மையை சொல்கின்ற தருணம் ,படத்தின் கடைசி நிமிடங்கள். அது வரை நாதிரை சிமினும் அவள் மகளும் நாமும் சந்தேகித்துக் கொண்டே இருப்போம். இங்கு தான் இயக்குனர் எங்களுக்கும் ஒரு பாடம் சொல்லித் தருகிறார், ஆண் எப்போதும் வில்லனாக இருப்பதில்லை. வில்லன்களுக்கு பால் வேறுபாடு இருப்பதில்லை யதார்த்தத்தில்.

நல்ல சினிமாவில் நல்ல மனிதர்களெ இருப்பார்கள். கடைசிவரையும் யார் வில்லன் என்று புரியாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நகர்த்திக் கொண்டே இருப்போம் வில்லன் பட்டத்தை.  கடைசியில் எல்லா மனிதர்களும் நல்லவர்களே, அவர்கள்  சூழ்நிலைக் கைதிகள் என்ற அடிப்படை உண்மையையும் கண்டு கொள்ளுவோம். எப்படி இது வரை மோசமான மனிதன் என்று நெற்றியில் ஒற்றப்பட்ட மனிதர்களை சந்திக்கவில்லையோ அவ்வாறே இங்கும் நாம் மோசமானவர்களைக் காணவில்லை.

இங்கு  சிமின், ராஸியா , நாதிர் என்று பெரியவர்களுடன் கதை நகர்ந்தாலும்,  இவை எப்படி நாதிரின் மகள் 'தாமெஹ்' ஐ பாதிக்கின்றது என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக பார்வையாளனின் உள்ளத்தில் உருத்த வைக்கிறார் இயக்குனர். இங்கு கதையே தாமெஹுக்குத்தான். அவளின் கடைசி மெளனம் அப்படியே சொல்கிறது, பெரியவர்களின் வாழ்க்கை போரட்டத்தில் சிறுவர்கள் தான் பலமும் பலவீனமும் என்று. தாமெஹ் அவளின் முக பாவங்கள் மூலம் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தருகிறாள். பெரியவர்கள் சிறுவர்களின் வாழ்க்கையில் நிறையவே பாதிக்கிறார்கள் அவர்கள் புரிந்துகொள்ளாமலே. தமெஹ் எம் குடும்பங்களிலுள்ள சிரிசுகளின் முழுப் பிரதிநிதி.

இது ஈரானின் நவீனகால சமூக பண்பாட்டு மாற்றங்களை சொல்கின்ற அற்புதமான அழகியல் குறையாத படம்.  ஊடக தீவிரவாதத்தை ஊடகங்கள் கொண்டே எதிர்க்க முடியும் என்பதை ஈரான் புரிந்து கொண்டுள்ளது என்பதை நாமும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

குறிப்பு: உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். ஒரு ஆரோக்கியமான உரையாடலை உருவாக்குவதே எனது ஆசை. மாற்றுக் கருத்துக்கள் முக்கியமானது. 

Saturday, February 9, 2013

மனுஷ்யபுத்திரன் ,பீ ஜே, நாம்...


"தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் விவாதத்தில் பயன்படுத்தும் மொழியையும் வழிமுறையையும் மனசாட்சியுள்ள, அறிவார்ந்த இஸ்லாமிய சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-மனுஷ்யபுத்திரன்"


(https://www.facebook.com/notes/manushya-puthiran/கடவுளின்-பெயரால்-பிப்ரவரி-உயிர்மை-தலையங்கம்படியுங்கள்-பகிருங்கள்/10151276454646725)

      மனுஷ்யபுத்திரனின் இந்த பத்தியை கண்ட பின் மனது மிகவும் கவலை அடைந்தது. ஒரு கணம் நானும் ஒருவனோ என்கின்ற வெட்கம் உருத்துகிறது. எப்படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு உயர்ந்ததோ, அது போலவே ஒவ்வொருவருக்கும் அவர் கொண்ட நம்பிக்கைளும் இலட்சியங்களும் உயர்ந்ததும் சிறந்ததும் ஆகும். அதை மதிப்பதும் புரிந்து செயல்படுவதும் அவர் கொண்ட நம்பிக்கைளுக்கு அப்பாற்பட்ட மிக சாதாரணமான பண்பாடு சார்ந்த விடயமாகும். ஒருவர் தன்னை ஒரு மதத்தின் முன்மாதிரியாக காட்டிக் கொள்ளும் போது இந்த சிறு பண்பாடு கூட அற்றவராக இருப்பது அவரை விட அந்த மதத்தை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு இழைக்கும் பெரும் அநியாயம் ஆகும்.










எனவே, விமர்சிக்கின்ற போது மரியாதையுடன் தம் பக்க நியாயங்களை முன்வைத்தல் என்பது ஒரு குறைந்த பட்ச நாகரிகமாகும். இந்த அடிப்படை கூட தெரியாதவர் ஒரு மத குருவாக இருப்பதும் அவரை பின்பற்ற ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பதும் மிகவும்ஆபத்தானது. இது பற்றி முஸ்லிம்கள் எதிர்வினையாற்றுவது அவசியமாகும். நியாயம் என்று வருகின்ற போது அது உங்கள் மதம் சார்ந்த்தாக இருக்க வேண்டியதில்லை , மனிதாபிமானம் சார்ந்த்ததாக இருத்தலெ அடிப்படை ஆகும். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு என்பதை விட மனிதர்களுக்கு நலம் கொண்ட விடயங்களையே சொல்கின்றது. அதன் கொள்கைகள் அனைவருக்கும் பொருந்தும் என்றால் நாம் அன்றாடம் காண்கின்ற அடிப்படை பண்பாட்டு விழுமியங்களை உள் வாங்கியதாக அல்லது அதை விட சிறந்த ஒன்றை முன்வைப்பதாக இருக்க வேண்டும்.  ஆனால் இவர்களின் முன்மாதிரி அப்படியான ஒன்று அறவே இல்லை என்ற உண்மைக்கு முற்றிலும் புறம்பான கருத்தையே எடுத்துச் சொல்கின்றது. இதை நாம் எதிர்த்தல் எம் மீதான அடிப்படை கடமையாகும்.
           
மனுஷ்யபுத்திரனை தொடர்ந்து வாசிப்பவன் என்ற வகையில் அவர் எப்போதும் அநியாயதுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்தவர், அதற்காக உயிர்மையில் அடுத்தவர்களுக்கும் இடம் கொடுத்தவர். இந்தியாவின் இந்துத்துவ தீவிரவாதத்துக்கு எதிரான குரலை பதிவு செய்த ஒருவர். அவர் இப்படி அவமானப் படுத்த பட்டமை மிகவும் அநாகரிகமான செயலாகவே கருதுகிறேன். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரி என்பது அல்ல , அவர் சொல்வதை கேட்டு நம்மை சுயவிமர்சனம் செய்வதோ அவருடன் உடன்பாடற்ற விடாயங்களுக்கு நியாயமான எதிர்கருத்துக்களை அழகான முறையில் முன்வைப்பதோ அன்றி மிக கீழ்தரமான விதத்தில் கூச்சலிடுவது ஒரு மிகப் பெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது.

Sunday, February 3, 2013


கமல் கற்றுத்தந்த பாடம்

  அன்புள்ள முஸ்லிம் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு திரைப்படம் உங்களது எதிர்ப்பின் முன் திண்டாடிக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்!!!
 (மீண்டும் ஒரு அம்மாவின் அரசியலில் பகடைக் காயாகி உள்ளீர்கள்  என்றும் கூறப்படுகின்றது…???)
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டம் செய்வதும் சொத்துக்களை சேதம் செய்வதும். உங்களிடம் நியாயம் இருக்கலாம் ஆனால் இது இத்துடன் நின்றுவிடப்போவது இல்லை. கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்கின்ற சின்ன வியாபார உத்தி கூட வியாபார சமூகம் என்று பெயர் எடுத்த உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என்று நம்புவது கடினம். ஆமாம் இனி நீங்களும் உங்கள் சொந்த சினிமாவை தயாரியுங்கள். நீங்கள் 'பித்னா'வுக்கும் 'விஸ்பரூவத்துக்கும்' எதிர்ப்பு காட்ட  உழைத்த உழைப்பில் உங்கள் பக்க நியாயங்களை சொல்ல ஒரு படமாவது எடுக்க முயன்றிருக்கலாம் . அப்போது கமல் அந்த திரைப்படங்களை பார்த்து ஒரு விஷ்பரூவம் எடுத்திருப்பார் , உங்கள் பக்க நியாயங்கள் அதில் இருந்திருக்கும். 
ஓ! மன்னிக்க வேண்டும் இன்னும் புகைப்படம் எடுக்கலாமா என்பதிலேயே நீங்கள் உடன்பட வில்லை .  ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை காண வேண்டுமே! . ஆமாம் நீங்கள் சினிமா எடுக்காத வரை இந்த பிரச்சினை முடிவதில்லை. உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்ய மறுக்கின்ற பொழுது அடுத்தவர்களின் விமர்சனங்களை எப்படி தாங்க முடியும். அவர்கள் கண்டதையும் கேட்டதையும் சொல்கிறார்கள், துரதிஷ்டவசமாக உங்கள் எதிரிகள் தான் உங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள், காட்டியும் இருக்கிறார்கள்.  நீங்கள் தான் ருஷ்டியை உங்களுக்கு எதிரனான மேற்கின் குரலாக மாற்றிக் கொண்டீர்கள். இப்போதெல்லம் இல்லை எப்போதுமே நீங்கள் புத்தகம் வசிப்பதில்லையே , எனவே தான் உங்கள் எதிரிகள் திரைபடம் எடுத்து உங்களை பற்றி அவர்களுக்கு வேண்டிய விதத்தில் சொல்கிறார்கள்.  இப்பொழுது 'Mohsen Makhmalbaf,' இன் 'கந்தஹார்' திரைபடத்தையாவது ஒரு முறை கமலுக்கு காட்டுங்கள்.