Sunday, February 17, 2013

நாதிர் சிமினின் பிரிவு




"A Separation",  அஸ்கர் பர்ஹாதியின் இயக்கத்தில் வெளிவந்த  ஈரானிய திரைப்படம்.  2012 சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஓஸ்கார் மற்றும் பல சர்வதேச விருதுகளையும் கொண்டு பெரு அங்கீகாரம் பெற்றமை தெரிந்த விடயம். வழமையான ஈரானிய திரைப்படங்களுக்குரிய சிறப்புக்களை கொண்டுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இங்கு அதன் கதை பற்றியோ ஏனைய தொழில்நுட்பங் குறித்தோ எழுதப் போவதில்லை. அது குறித்து போதிய அறிவோ அநுபவமோ இல்லை. ஓரு திரைப்படம் எடுப்பதன் வலியும் வேதனையும் எடுத்தவனுக்கு தான் தெரியும். ஆனால் ஒரு சாதாரண ரசிகனாக நான் கண்ட சில வித்தியாசங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

வழமையாக சிறுவர்களை மையப்படுத்தி நகர்ந்த ஈரானிய கதைகளுக்கு நடுவில் பெரியவர்களின் வாழ்க்கை இங்கு பேசப்படுவது முக்கியமானது. பல அரசியல் சமூக விவாதங்கள் கொண்ட திரைப்படங்கள் ஈரானிய அரசின் தணிக்கைகள் காரணாமாக அவ்வளவாக சாதரண மக்களுக்கு பார்க்க கிடைப்பதில்லை. ஆனாலும் இங்கும் அதே யதார்த்தமான மனிதர்களை சந்திக்க கிடைக்கின்றது. அதிலும் வித்தியாசமாக பெண்கள். ஈரான் என்றாலே பெண் அடிமைத்தனம் , கறுப்பு ஆடையில் முகம் மூடிய, அந்நியவர்களுடன் பேச அனுமதிக்கப்படாத பெண்கள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள மாயை இங்கு உடைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தான் கதையை நகர்த்துகிறார்கள்.



 'சிமின்' என்கின்ற பெண்,  தனது கணவன் தனது மகளுடன் அமெரிக்கா வர மறுப்பதை காரணம் காட்டி தனக்கு விவாகரத்து வேண்டி வழக்கு தாக்கல் செய்கிறாள். என்னை பொறுத்த வரையில் இந்தப் பெண்ணினால் தான் இந்த கட்டுரையே. பெண் உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் இவள் எப்படி சாத்தியம்? . அவளின் காரணம் மிக சாதரணமானதாக இருந்தும் அவளால் அதற்கு போராட முடிகிறது . கதை முழுதும் அவள் கணவனுடன் எவ்வளவு அன்பானவள் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த பிரிவு வித்தியாசமானது. அவளுக்கும் கணவனுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், பிரிய மாட்டோம் என்று, ஆனால் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கும். இதை விட கணவன் மனைவி உறவின் அழகை சொல்லியிருக்க முடியாது. சிமின் கறுப்பு நிகாப் அணிவதே இல்லை. அவளது ஆடை மேற்கின் சிந்தனைகளை பிரதிபலிக்கும் பெண்  என்பதையே காட்டுகிறது. தனியாகவே காரை ஒட்டுகிறாள். தனியாக சென்று பொலீஸில் கணவனுக்காக வாதாடுகிறாள். கடைசியில் அவளே பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறாள்.  இந்த கதாபாத்திரம் ஈரானின் உண்மையான பெண்களை பிரதிபலிக்கும் என்றால் நமக்கு ருஷ்டி சொன்ன ஈரான் காலவதியாகிவிட்டதாக சொல்லலாம். ஏன் இது குறித்து யாரும் பேசவில்லை என்பது ஆச்சரியமானதே. எப்போதும் ஊடகங்கள் ஈரானை மேற்கு கட்டமைத்த வரையரைக்குள்ளேயே பார்க்கின்றன.

கடைசிக் காட்சியில் ராஸியா தனது கணவனிடம் தானே பொய் சொன்னதாக சொல்கின்ற போது அவள் கணவன் காட்டும் தடுமாற்றம் அவனுடைய கோபமா,  இயலாமையா என்று எங்களுக்கே ஒரு தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்த காட்சியில் வேறு எந்த சினிமாவிலும் அந்த பெண் தன் கணவனிடம் அடி வாங்கியிருப்பாள். பெண்களை அடிமையாக்கிய ஒரு சமூகத்தின் வலிமை மிக்க ஆண் தன்னையே அடித்துக் கொள்கிறான். ஈரானின் ஆண்கள் எப்போது பெண்களோடு இப்படி நளினமாக பழகத் தொடங்கினார்கள்?.  இங்கு மனது ராஸியாவை மன்னித்து விடுகிறது.  ராஸியா யார்?..

சிமின் தனது கணவன் நாதிருடன் முரண்பட்டு தன் தாய் வீட்டிற்கு போய்விடுகிறாள். அவளுடன் கணவன் வர மறுக்க காரணமான நாதிரின் வயதான நோய்வாய்ப்பட்ட தந்தையை கவனிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பெண் தான் ராஸியா.  ராஸியா தன் கவனயீனத்தால் வெளியில் சென்ற வயதான தந்தையை தேடிச் செல்லும் வழியில் ஏற்படும் விபத்தில் தன் வயிற்றில் இருந்த கருவை இழக்கிறாள். ராஸியாவின் கவனயீனத்தினால் நாதிரின் தந்தை விபத்துக்குள்ளாக, நாதிர் ராஸியாவை வெளியில் தள்ளுகிறான். இதை காரணமாக்கி கரு கலைந்ததற்கு நாதிரே காரணமென குற்றம் சாட்டுகிறாள். இதுவே கதையின் திருப்பம்.   மனிதர்களின் சூழ்நிலைகளே அவர்களை பலவீனர்களாக்குகிறது என்ற வாழ்வின் உண்மையை சொல்கின்ற தருணம் ,படத்தின் கடைசி நிமிடங்கள். அது வரை நாதிரை சிமினும் அவள் மகளும் நாமும் சந்தேகித்துக் கொண்டே இருப்போம். இங்கு தான் இயக்குனர் எங்களுக்கும் ஒரு பாடம் சொல்லித் தருகிறார், ஆண் எப்போதும் வில்லனாக இருப்பதில்லை. வில்லன்களுக்கு பால் வேறுபாடு இருப்பதில்லை யதார்த்தத்தில்.

நல்ல சினிமாவில் நல்ல மனிதர்களெ இருப்பார்கள். கடைசிவரையும் யார் வில்லன் என்று புரியாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நகர்த்திக் கொண்டே இருப்போம் வில்லன் பட்டத்தை.  கடைசியில் எல்லா மனிதர்களும் நல்லவர்களே, அவர்கள்  சூழ்நிலைக் கைதிகள் என்ற அடிப்படை உண்மையையும் கண்டு கொள்ளுவோம். எப்படி இது வரை மோசமான மனிதன் என்று நெற்றியில் ஒற்றப்பட்ட மனிதர்களை சந்திக்கவில்லையோ அவ்வாறே இங்கும் நாம் மோசமானவர்களைக் காணவில்லை.

இங்கு  சிமின், ராஸியா , நாதிர் என்று பெரியவர்களுடன் கதை நகர்ந்தாலும்,  இவை எப்படி நாதிரின் மகள் 'தாமெஹ்' ஐ பாதிக்கின்றது என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக பார்வையாளனின் உள்ளத்தில் உருத்த வைக்கிறார் இயக்குனர். இங்கு கதையே தாமெஹுக்குத்தான். அவளின் கடைசி மெளனம் அப்படியே சொல்கிறது, பெரியவர்களின் வாழ்க்கை போரட்டத்தில் சிறுவர்கள் தான் பலமும் பலவீனமும் என்று. தாமெஹ் அவளின் முக பாவங்கள் மூலம் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தருகிறாள். பெரியவர்கள் சிறுவர்களின் வாழ்க்கையில் நிறையவே பாதிக்கிறார்கள் அவர்கள் புரிந்துகொள்ளாமலே. தமெஹ் எம் குடும்பங்களிலுள்ள சிரிசுகளின் முழுப் பிரதிநிதி.

இது ஈரானின் நவீனகால சமூக பண்பாட்டு மாற்றங்களை சொல்கின்ற அற்புதமான அழகியல் குறையாத படம்.  ஊடக தீவிரவாதத்தை ஊடகங்கள் கொண்டே எதிர்க்க முடியும் என்பதை ஈரான் புரிந்து கொண்டுள்ளது என்பதை நாமும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

குறிப்பு: உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். ஒரு ஆரோக்கியமான உரையாடலை உருவாக்குவதே எனது ஆசை. மாற்றுக் கருத்துக்கள் முக்கியமானது. 

No comments:

Post a Comment