ஒரு திரைப்படத்தின் சினிமாயியல் குறித்து விமர்சிக்க அது குறித்து ஆழ்ந்த அறிவும் அனுபவும் அவசியம் என நினைப்பவன் நான். காட்சி ஊடகம் ஒரு வலிமையான புரட்சிக் கருவி என கருதும் ஒரு ரசிகனாகிய நான் அது கட்டுடைக்க வேண்டிய தனி மனித, சமூக கருத்துக்கள் குறித்து பேசுவதே நியாயம் என நினைத்து, போலி நகைச்சுவை திரைப்படங்களுக்கு இடையே அண்மையில் வெளிவந்த இயக்குனர் ராமின் "தங்க மீன்கள்" குறித்து என் வரிகளை பதிவு செய்கின்றேன்.
ஒரு ஆசிரியரை கோமாளி ஆக்கிவிட்டால் அதை ஒரு சிறுவர் திரைப்படம் என்று ஆக்கி பாடசாலை, கல்வி முறை என எல்லாவற்றிலுமுள்ள வெறுப்பை, தமது ஆதங்கங்களை ஆசிரியர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள். உண்மையில் “தங்கமீன்கள்” ஆசிரியர்களை குறைகாண்கின்ற திரைப்படமா?. தங்கமீன்கள் பேசுகின்ற அரசியல் தான் என்ன?. ஏன் தனியார் பாடசாலைகள் அரச பாடசாலைகளை விட பிரபலமானதாகவும் சிறந்ததாகவும் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்?. ஏழைகளின் பிள்ளைகள் பாடசாலை செல்ல ஆரம்பித்த போது பணக்காரர்களுக்கு தமது தனித்துவம், தமது அதிகாரம் எல்லாவற்றையும் தமது பிள்ளைகளுக்கு கடத்துவதற்கு ஒரு வழிமுறை தேவைப்பட்டது. அதற்கு சிறந்த வழிமுறையாக தனியார் பாடசாலைகளை கண்டார்கள். அரச பாடசாலைகளை தரம் குறைந்த மோசமான பாடசாலைகளாக ஒரு பிம்பத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். நடுத்தரவர்க்கத்திற்கு எப்போதும் தம்மை பணக்காரர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு நோய் இருக்கின்றது. அதற்கு சிறந்த வழிமுறையாக தனியார் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை படிக்க வைத்து, சூதாட்டம் என்பதைப்புரிந்து கொள்ளாமல் அதை தமது அந்தஸ்தின் தரமாக மாற்றிக் கொண்டார்கள் . ‘கல்யாணி’ என்கின்ற அப்பாவும் இந்த சமூக கருத்து நிலைக்கு பலியாகிய எத்தனையோ அப்பாக்களின் பிம்பம் தான். அரசு பாடசாலைகளையும் அதன் ஆசிரியர்களையும் சந்திகளில் விமர்சித்த அளவுக்கு தாம் காசு கொடுத்து படிக்க வைக்கின்ற தனியார் பாடசலைகள் குறித்தோ அதில் இருக்கின்ற உயர்தரம் கூட தேராத ஆசிரியர்கள் குறித்தோ பேசுவது கூட இல்லை. ஏனெனில் திரைப்படத்தில் போலவே கேள்வி கேட்டால் பிள்ளையை வேறு பாடசாலைக்கு மாற்றி விட சொல்லிவிடுவார்கள். இதனால் தான் சந்துக்கு சந்து சில்லறை கடைகளை விட சர்வதேச பாடசாலைகள் அதிகரித்து விட்டன. இந்த சமூக மன நோய் கல்யாணியை ஊரிலிருந்து, தன் குடும்பத்திலிருந்து பிரித்து, ஊண் உறக்கமின்றி இரவு பகலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. எங்கள் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காக கடல் கடந்து தூர தேசம் சென்று படும் துயரங்கள் இதை விட கொடுமையானது.
இந்த திரைப்படத்தின் கதாநாயகி "செல்லம்மா " வைப் போன்று எங்கள் குழந்தைகள் ஆங்கில மொழியில் கல்வி கற்க நிர்ப்பந்திக்கப்பட்டு தம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆங்கில எழுத்து கூட தெரியாத நிலையில் தம் செல்லம்மாக்களை சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சந்தோசப்படுகிறார்கள். அவர்களை பொருத்தவகையில் அவர்களால் முடியாததை பிள்ளைகள் அடைந்து கொண்டார்கள் என்று நினைக்கிறார்கள்.ஆனால் குழந்தைகள் தமது பாடங்களை விளங்குவதை விட அதை கற்பிக்கும் மொழியை புரிந்து கொள்வதில் திணருகிறார்கள். தமது பாடங்களை தம் அன்றாட வாழ்வியல் அனுபவங்களுடன் சம்பந்தப் படித்திக்கொள்ள முடியாமல் கல்வி கற்றல் என்பதை ஒரு சுமையாக கண்டு வெறுக்கிறார்கள். இதை பெற்றோர் உணர மறுக்கின்ற துரதிஷ்டம் குழந்தைகளின் வாழ்க்கையை வீணாக்கி , அவர்களை W ஆக்கிவிடுகின்றது.
இங்கே நாம் ஆசிரியர்களை மாத்திரம் குற்றவாளி கூண்டில் கழுவேற்றி எங்களின் மீசைகளை பாதுகாத்துக்கோள்கிறோம். எங்களுக்கு தெரிந்து எத்தனை ஆசிரியர்கள் இப்படி இருந்திருப்பார்கள்?. ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே இருப்பார்கள். ஓரு ஆசிரியரின் வேதனைகளை யாரும் கேட்டுப்பார்த்தது கிடையாது. ஒரு வகுப்புக்கு தயாராவதன் பின்னாலிருக்கின்ற வலியினை ஒரு ஆசிரியர் மட்டுமே அறிவார். இதை யாரும் வெளிக்கொணர ஏதும் செய்வார்கள் என்றும் தோன்றவில்லை.
மொத்தத்தில் இந்த திரைப்படம் எங்கள் நியாயங்களையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகின்றது. ஏன் நமது காசை அரச பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தக்கூடாது?. அரசாங்க பாடசாலைகளில் கழிவரை கூட இல்லாத நிலையில் தனியார் பாடசாலைகளை குளிரூட்டுவதில் எங்கள் பணங்களை புதைக்கிறோம். இந்த அதிகாரவர்க்கத்தின் சுரண்டலை கேள்விக்குட்படுத்துவதனாலோ அல்லது ஒரு பெரும்பான்மை மக்கள் தொகையின் அந்தஸ்து நிலையை கேள்விக்குட்படுத்தவதனாலோ என்னவோ திரைப்படம் வெளிவர மூன்று வருடங்களாக இயக்குனர் ராம் காத்திருக்க வேண்டியிருந்திருந்ததோ எனத் தோன்றுகின்றது.
வழமை போன்று ஊடகங்களும் இதை ஒரு வழமையான நமது கல்வி முறையியல் குறித்தான விமர்சன திரைப்படம் என அறைத்த மாவையே அறைக்கும் காத்திரமான பங்களிப்பை செய்து முடித்துள்ளன. ராமின் "கற்றது தமிழ்"திரைப்படமும் கலைத்துறை பட்டதாரிகளை எப்படி சமூகம் மிகக் கீழ் நிலையில் கொண்டு சேர்த்துள்ளது என்பதையும் பணம் பார்க்கும் துறைகளை மட்டுமே மதிப்புக்குறையதாக அதிகார வர்க்கம் மாற்றியமைத்து நமது சமூகத்தின் கனவாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் பேசியது.
எனவே ஒரு சினிமா நமது கால நம்பிக்கைகளையும் கனவுகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. பண முதலைகளின் சுரண்டல் அரசியலின் எங்கள் வியர்வையின் வலிகள் பகடைக்காய்களாக்கி விடப்பட்டுள்ளன. எப்போது டீக் கடைகளில் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை விவாதிக்கப் போகின்றோம்?. விடைகள் தேட விழுமியங்கள் இடம் கொடுக்குமா?.
No comments:
Post a Comment